தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நீட் தேர்வு குறித்த உங்கள் பார்வை என்ன? - வாணி போஜனின் பதில் இதுவா? - Vani Bhojan - VANI BHOJAN

Vani Bhojan: நீட் தேர்வு குறித்த கேள்விக்கு படத்தில் அனைத்தும் உள்ளது என நடிகை வானிபோஜன் அஞ்சாமை பட செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 8:05 PM IST

சென்னை:ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு வெளியிட, திருநாவுக்கரசு தயாரித்து இயக்குநர் எஸ்.பி சுப்புராமன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடித்துள்ள படம் அஞ்சாமை. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விதார்த், நடிகை வாணி போஜன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் வித்தார்த், “அஞ்சாமை, நடிப்பு துறைக்கு வந்ததில் இருந்து இந்த படத்தை தேர்வு செய்ததை நல்லதாக நினைக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கதை கேட்டேன். அதைக் கேட்டதும் அழுக ஆரம்பித்து விட்டேன்.‌ இந்த கதையை எப்படி பண்ணப் போறோம் என்று யோசித்தேன். இந்த படம் ஒப்புக் கொண்டதால் வேறு சில படங்களை விட்டுட்டேன். நான் நடித்ததில் இந்த படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்.

முதன் முதலில், மக்களுக்கு குறைகளை மன்னரிடம் சொல்லும் போது, கலை மூலம் தான் சொல்ல துவங்கினர். இன்றைக்கு சினிமாக்களில் நிறைய இயக்குநர்கள் நிறைய கருத்துகளை சொல்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் மக்களின் வலியை, பிரச்சினையை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும் போது, அதிலிருந்து மீள முடியவில்லை. இது நம்முடைய படம். நம்முடைய பிரச்சினையை என் படத்தின் மூலம் சொல்ல வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.

எனக்கு ரேவதி மேடம் ரொம்ப பிடிக்கும். அதற்கு அடுத்ததாக இந்த படத்தில் வாணி போஜன் அவ்வளவு நன்றாக நடித்துள்ளார். வேறு வாணியை இந்த படத்தில் பார்ப்பீர்கள். என் நல்ல படங்களை கொண்டு வர தயாரிப்பாளர்கள் முன் வருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், இந்த படம் பார்க்க வேண்டும் என்பது நம் கடமை. நான் பணம் வாங்கிக் கொண்டு நடித்தாலும் இதில் நடித்ததை என் கடமையாக நினைக்கிறேன். நான் நடிக்க வந்ததற்கான அர்த்தம் இந்த படத்தில் இருப்பதாக நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வாணி போஜன், “ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.‌ நான் வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ உங்களைச் சந்திக்கிறேன். கொடுத்து வைத்தவளாக நினைக்கிறேன். இந்த படத்தை ரொம்ப விரும்பி பண்ணிருக்கேன். உயிரை கொடுத்து ஒர்க் பண்ணிருக்கிறோம். இது ஒரு நல்ல படமாக இருக்கும்.‌ ஒரு நடிகையாக சமூக கருத்து உள்ள படத்தை மிஸ் பண்ண மாட்டாங்க.‌ அதில் நானும் ஒப்புக்கொண்டேன். நான் நடிக்க வருவதற்கு முன்பே தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் படங்களை பார்த்திருக்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எனக்கு மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இந்த படத்தை ரொம்ப லவ் பண்ணி பண்ணிருக்கேன். இது எனக்கு ரொம்ப சந்தோசமான நாள்” எனக் கூறினார்.

தொடர்ந்து, ரம்பாவா? ரேவதியா? இல்லை வாணியா? யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, “வாணியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் நிறைய படம் பண்ணியிருந்தாலும் ஆடிஷன் கூப்பிட்டாங்கன்னு சொன்னீங்க என்றதற்கு நான் நல்லா நடிப்பேன்னு சொன்னேன். சீரியலில் 5 வருஷம் தினமும் நடித்திருக்கிறேன் என்று பெருமையோடு சொல்வேன். இந்த படத்தில் எப்படி பொருந்துகிறேன் என்பதற்காக இயக்குநர் நடித்து காட்டச் சொன்னார்” என்றார்.

மேலும், நீட் தேர்வு தொடர்பாக உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, “நீட் குறித்து பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அதைப் பற்றி பேசிய படத்தில் நான் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய எஸ்.ஆர் பிரபு, “ஆரம்ப காலத்தில் ஜோக்கர், அருவி படங்கள் வெளிவந்த பிறகு பரவாயில்லை நல்ல படங்கள் வாங்கி ரிலீஸ் பண்ணிட்டீங்க என்று சொல்லுவாங்க. முதலில் நல்ல படங்களை எடுப்போம்.

எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலான படம் நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தை அடையும். நம்முடைய குழந்தைகளுக்காக நாம் இருப்போம். அதில் படிப்பு என்றால் பல பெற்றோருக்கு இருக்கும் கனவு, என் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்பது தான். இந்த மாதிரியான படத்தை தயாரித்த திருநாவுக்கரசுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, நீட் தேர்வு எட்டாக்கனியாக இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு, “நீட் தேர்வு பற்றிய பல கேள்விகளுக்கான படமாக இந்த படம் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நீட்டுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று கருத்தை முன்மொழிய வேண்டாம்” என்றார்.

மேலும் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு, “நான் மனநல மருத்துவர். சமூகத்தில் இருக்கும் நல்லதை பார்த்து பழகுகிறோம். சில விஷயங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைய பேர் சம்பாதித்தாலும் படிப்புக்குச் செலவு செய்கிறார்கள். நானும் ஒவ்வொரு முறையும் நிறைய புத்தகங்கள் எழுதி புத்தகக் கண்காட்சியில் தனி ஸ்டாலில் போட்டிருக்கிறது. நான் 50 வருடம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக இருந்திருக்கிறேன்.

அதனால் மருத்துவக் கல்லூரி எப்படி இருந்திருக்கிறது, இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியும்.‌ நீட் தேர்வில் இருக்கும் உண்மையைச் சொல்ல நினைத்தோம். மற்றபடி யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ சொல்லவில்லை. நாங்கள் எடுத்த புள்ளி விவரங்கள் தரவுகளை சென்சாரில் கேட்டார்கள். சரியாக இருந்தது. வேறு எதுவும் பிரச்சினை இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மேடையில் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டதால் வெடித்த சர்ச்சை.. நடிகை அஞ்சலியின் ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details