சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி, சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து நேரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீதாராம் யெச்சூரி பொதுவுடைமை இயக்கத்தின் போர் சிங்கம். அவரது மறைவு என்பது ஒரு கட்சிக்கான இழப்பு அல்ல, தேசத்துக்கான இழப்பு. ஒரு கட்சிக்காக மட்டும் போராடுகிறவன் அரசியல்வாதி என்று அறியப்படுகிறான்.
தேசத்திற்காக போராடியவன் தேசியவாதி என அறியப்படுகிறான். அவருடைய இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரது இடத்தை நிரப்ப நூறு அறிவு ஜீவிகள் கோடி நிரப்ப வேண்டும் என்பது என்னை போன்றவர்களின் எண்ணம். தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது அவர் மீது கூடுதல் பாசத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. நெருக்கடி நிலையில் இருந்து இந்துத்துவா வரைக்கும் சமரசம் இல்லாமல் போராளியாக தன் வாழ்நாள் முழுவதும் பயணித்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி.
அவரிடம் எனக்கு பிடித்த குணம் அஞ்சாமை. நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்ற எழுகிறார் என்றால், அத்தனை கண்களும் அவர் மீது மொய்க்கும். அத்தனை செவிகளும் அவர் மீது நிலைகொள்ளும். அவரின் கருத்துக்கு நாடாளுமன்றமும் நாடும் கூர்ந்து கவனித்தன.
அவரின் அஞ்சாமைக்கு காரணம் அவரது சத்தியம். பொது வாழ்க்கைக்கு வருகிற எவனுக்கு சத்தியம் இருக்கிறதோ, எவன் நேர்மையின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வருகிறானோ, எவன் உண்மையைவிட்டு விலகாமல் இருக்கிறானோ அவன் அஞ்ச மாட்டான் என்றார்.
மாணவர் முதல் மரணப் படுக்கை வரை தன் வாழ்வை இயக்கத்திற்கும், நாட்டுக்கும் அர்ப்பணித்துச் சென்ற ஒரு மாபெரும் தலைவர் சீதாராம் யெச்சூரி, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். யெச்சூரி என்பது சாதிப் பெயர் அல்ல. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவரது பூர்வ கிராமத்தின் பெயர் எச்சூரி. தன் பெயரில் தன் மண் நினைவில் இருக்க வேண்டும் என்பது எச்சூரி என்பதை சேர்த்து வைத்து இயங்கினவர்.