சென்னை: கடந்த 2004ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமாக கில்லி உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
குறிப்பாக அப்படி போடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றுவரை பலரது விருப்பப் பாடலாக உள்ளது. கில்லி வெளியான போது ஹவுஸ்புல் காட்சிகளுடன் மெகா ஹிட்டானது. கில்லி வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று உலகம் முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சேர்த்து, இப்படம் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
கில்லி ரீ ரிலிஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அனைத்து இடங்களிலும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை கில்லி திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. முதல் நாள் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடி வரை வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வசூல் சாதனை படைக்கும் பட்சத்தில், இதுவரை வெளியான ரீ ரிலீஸ் படங்கள் செய்யாத சாதனையாக இது இருக்கும்.