சென்னை: நடிகை த்ரிஷா சூர்யா 45, 96 இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை த்ரிஷா 1999ஆம் ஆண்டு வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ’மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். பின்னர் சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, ஆறு, சம்திங் சம்திங், கிரீடம், பீமா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிகையாக வலம் வரும் த்ரிஷா ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் த்ரிஷா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. ஜெஸ்ஸி, குந்தவை ஆகிய கதாபாத்திரங்களின் மூலம் இன்று வரை ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம் பெற்றுள்ளார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது 96 இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும், அந்த படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கும் 96 இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை dawn pictures சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.