திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ’வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திருச்சியில் இன்று காலை வேட்டையன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள 170வது திரைப்படம் 'வேட்டையன்’. இந்த படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதேபோல் 32 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜின்காந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிக பிரமாண்டமாக ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியானது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாகவும், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திருச்சி எல்.ஏ திரையரங்கில் வேட்டையன் திரைப்பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடினர்.
அப்போது திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மாவட்ட துணை தலைவர் சுதர்சன் தலைமையில், மாவட்ட செயலாளர் கலீல் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் வேட்டையன் திரைப்பட போஸ்டருக்கு ஒரு டன் மலர்களை தூவினர்.