சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னை ரோகிணி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரது மகள்கள் ஐஷ்வர்யா, சவுந்தர்யா, நடிகர் தனுஷ், அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் வேட்டையன் படம் பார்த்த அனிருத்தின் தந்தை, நடிகர் ரவி ராகவேந்திரா, “வேட்டையன் திரைப்படம் மாஸ் மற்றும் கிளாஸ் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் ஸ்டைல் மற்றும் ரஜினிகாந்த் ஹீரோயிஸம் சேர்த்து மிகவும் நன்றாக உள்ளது” என்றார். மேலும் அனிருத்தின் இசை கதைக்கு ஏற்றார் போல் உள்ளது என்றார். தமிழ் அளவிற்கு தெலுங்கில் அனிருத்திற்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது என்றார்.
இதனைத்தொடர்ந்து வேட்டையன் படம் பார்த்த ரசிகர் ஒருவர் பேசுகையில், “இந்த படத்தில் ராணா, ஃபகத் ஃபாசில், என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். தலைவரை மாஸாக காட்டியுள்ளனர். குழந்தைகளை பெற்றோர் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே வேட்டையன் படத்தின் கருத்து” என கூறியுள்ளார்.