சென்னை:கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் உட்பட சில முக்கிய முடிவுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நடிகர் சங்கம் தங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் கோலிவுட்டில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆரம்பம் முதல் ஒரு சில படங்கள் மட்டுமே தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில், திரையரங்குகளின் நிலை குறித்து ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "திரையரங்குகளில் படம் வெளியாகி 8 வாரங்கள் ஆன பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதனால் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள். நேரம் இடைவெளி அதிகரிக்கும் போது திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் என்று மக்கள் நினைப்பார்கள். ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனல்கள் அதிக விலைக்கு வாங்குவதில்லை. இதனால் திரையரங்குகளில் படம் நன்றாக ஓடினால் தான் நல்ல விலை கிடைக்கும். இது எல்லோரும் எடுத்த நல்ல முடிவு.
கடந்த ஆறு மாதங்களில் தமிழ்ப் படங்கள் அதிக அளவு வெற்றி பெறாதது திரையரங்குகள் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்புதான். ஏற்கனவே திரையரங்குகள் நட்டத்தில் ஓடுகிறது. வரக்கூடிய படங்களும் நல்ல கதை இல்லாமல் ஏனோதானோ என்று எடுத்தால் திரையரங்குகளை மூட வேண்டியதுதான்.
படத்தில் கதை நன்றாக இல்லை என்றால் மக்கள் திரையரங்குகளுக்கு வரமாட்டேன் என்கின்றனர். கோடிக்கணக்கான பணம் செலவழித்து தரம் இல்லாமல் படம் எடுக்கின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 6 மாதங்களில் 25 சதவீத திரையரங்குகளை மூட வேண்டியதை தவிர வேறு வழி இல்லை.