சென்னை: இந்து பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, மனுஸ்மிருதி புத்தகத்தில் இந்து பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக, விசிக தலைவர் திருமாவளவன் மீது தாமோதரன் என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் சார்பில், மனுஸ்மிருதி பெண்களை எவ்வாறு சித்தரித்துள்ளது என கூறியதாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த கருத்தும் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போயும் போயும் துணை முதல்வரா..? பிரதமர்னு சொல்லிருக்கலாம்.. - திருமாவளவன் சூளுரை!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனு ஸ்மிருதி புத்தகத்தை பற்றி திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மனுஸ்மிருதி புத்தகத்தின் எந்த கருத்துக்களையும் அவரது பேச்சில் குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட யாருக்குm எதிராகவும் கருத்து தெரிவிக்கவில்லை.
மனுஸ்மிருதி புத்தகத்தில் என்ன குறிப்பிட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை. திருமாவளவனின் பேச்சினால் யாரும் பாதிக்கப்படவில்லை," எனக் கூறி திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மனுஸ்மிருதி விவகாரம்
"மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஆதிக்குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24.10.2020 சனிக்கிழமையன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என ஒரு அறிவிப்பை வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதன்படி, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், மனுஸ்மிருதி தொடர்பான சிலத் தகவல்களை பேசினார். அதன் தொடர்ச்சியாக இந்து பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசினார் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.