ஹைதராபாத்: நடிகை சமந்தா, நாக சைதன்யா பிரிவிற்கு தெலங்கானா பி.ஆர்.எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், தெலங்கானா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா, ”சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற்றதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம்” என கூறியுள்ளார். இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், “பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மிகவும் கவர்ச்சிகரமான இந்த சினிமா துறையில், சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னையை எதிர்கொண்டு, மீண்டு வருவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. இந்த பயணத்தில் நான் பெருமை கொள்கிறேன். அமைச்சர் கொண்டா சுரேகா, ஒரு அமைச்சராக நீங்கள் கூறிய கருத்து தவறானது என உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஒரு தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். எனது விவாகரத்து என்பது சொந்த விஷயம். அதனைப் பற்றி யூகங்களை தவிர்க்க வேண்டும். எனது விவாகரத்து எங்களது இருவரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அதில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. அரசியல் விவகாரத்தில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். நான் அரசியல் விஷயத்தில் தலையிட மாட்டேன், கடைசி வரை அவ்வாறே இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.