சென்னை: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. திரையரங்குகளில் சிறு பட்ஜெட் படங்களுக்கு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று திரையரங்குகள் சங்கத்திற்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது கடிதத்துக்கு பதில் அளித்து திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு காட்டமான கடிதம் அதில், "தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களது கருத்துக்களை தெரிந்து கொண்டோம். எங்களது நிலைமையை தங்களுக்கு விளக்கவே இந்த கடிதம் எழுதுகிறோம். ஒரு படம் எடுத்த பிறகு, அது ஆயிரம் கோடி, 800 கோடி, 536 கோடி வசூல் செய்து விட்டது என்று நீங்கள்தான் விளம்பரம் செய்கிறீர்கள்.
அப்போது எப்படி நஷ்டம் வரும்? அடுத்தது மிக அதிக தயாரிப்புச் செலவில் நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பெருமளவு சம்பளம் கொடுத்துவிட்டு, அதனுடைய சுமையை எங்கள் மீது இறக்கி வைக்க முனைகிறீர்கள். தங்களுடைய படங்களுக்கு வெளிநாட்டு உரிமை, டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை, இந்திய உரிமை, பாடல் உரிமை போன்ற பலவிதமான வருமானம் கிடைக்கிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு காட்டமான கடிதம் மேலும், எங்களை துன்புறுத்தி 75 மற்றும் 80 சதவிதம் பங்குத்தொகையாக பெற்றுக் கொள்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மின் கட்டண உயர்வு, மினிமம் வேஜஸ் சட்டப்படி அதிகரிக்கும் சம்பளம் என பல விதமான சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
சென்ற வருடம் வெளியான 318 படங்களில் 19 படம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற படங்கள் வெள்ளி, சனி முடிந்த உடனே வசூல் இல்லாமல் போகிறது. அதற்கு மிகக் குறுகிய காலத்தில் ஓடிடி உரிமை கொடுக்கப்படுவது மிகப்பெரிய காரணம். இந்தி பட உலகில் எட்டு வார காலத்திற்குப் பிறகு மட்டுமே ஓடிடி உரிமை கொடுக்கப்படுகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு காட்டமான கடிதம் அதனை தமிழ்நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் வைத்துள்ளோம். ஆனால், நீங்கள் அந்த நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை. தங்களுக்கு பல புதிய தளங்களில் இருந்து வருவாய் வரக்கூடிய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரையில், தியேட்டர் வருமானத்தை தவிர வேறு எந்த வருவாயும் இல்லை, எங்கள் தியேட்டரின் இடம் பொறுத்து எந்த மாறுதல் செய்தாலும் இதைவிட பத்து மடங்கு அதிக வருமானம் கிடைக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், நகையை அடகு வைத்து அல்லது விற்று தொழில் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மேலும், வேறு கமர்ஷியல் ஆக்டிவிட்டி செய்யலாம் என்றாலும், அதற்கும் தடையாக உள்ளீர்கள்.
கடந்த 3 மாதங்களில் சுமார் 60 தியேட்டர்கள் சரியான வருவாய் இல்லாதால் மூடப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் 60 தியேட்டர்கள் மூடிவிடும் சூழ்நிலையே உள்ளது. ஆனால், திரைப்படம் திரையிட திரையங்கம் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். எனவே, நீங்கள் தயாரிப்புச் செலவு, நடிகர் சம்பளம் இவற்றை குறைத்து மக்கள் ரசனைக்கேற்ப அதிக அளவில் மக்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்க்கும் அளவிற்கு நல்ல படங்களை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், எங்களின் முக்கிய கோரிக்கையாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு 50%, சிறு முதலீட்டு படங்களுக்கு 40%, ரீ ரிலீஸ் படங்களுக்கு 25% என்ற அடிப்படையில் பங்குத்தொகை பெற்றுக் கொண்டால் சினிமா உலகமே வெற்றி வாகை சூடும். ஆகவே இதுகுறித்து அனைவரும் கூடி நல்ல முடிவு எடுப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்; 11 மணி நிலவரப்படி 170 ஓட்டுகள் பதிவு!