சென்னை: சென்னையை அடுத்த பையனூரில் அமையவிருக்கும் திரைப்பட நகரத்தில் தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் உறுப்பினர்களும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 100 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.
பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுப்பித்து அரசாணை வெளியிட்டார். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று (பிப்.25) அண்ணா சாலையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என். ராமசாமி பேசுகையில், ”தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அனைத்து சங்க உறுப்பினர்களும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 100 ஏக்கர் நிலத்தை 2010ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கினார்.
அந்த அரசாணையை புதுப்பித்து தர வேண்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தக் கோரிக்கையை கனிவுடன் ஆராய்ந்து தமிழ் திரைத்துறையில் உள்ள நலிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட பரிசீலனை செய்து மேற்படி இடத்தின் அரசாணையை ஏற்கனவே இருந்தது போலவே புதுப்பித்து தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.