சென்னை:கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக, வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல்மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 292 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கேரளாவை இந்த பேரிடர் உலுக்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று பார்வையிட உள்ளனர். மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், ராஷ்மிகா மந்தனா, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து, நடிகர் விக்ரம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.