சென்னை: 'மதகஜராஜா' திரைப்படத்தின் வசூல் 50 கோடியை நெருங்கியுள்ளது. ஜெமினி ஃபிலிம் சர்க்கியுட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகவிருந்த 'மதகஜராஜா' திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. இயக்குநர் சுந்தர்.சி அதற்கு பிறகு பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப் வைக்கப்பட்டது. இதனையடுத்து பல சிறிய படங்கள் ரிலீசுக்கு திடிரென தயாரானது.
அந்த வரிசையில் மதகஜராஜா திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பழைய படம் என்பதால் இந்த காலத்திற்கு ஏற்றவாறு அப்டேட்டாக இருக்குமா என ரசிகர்கள் சந்தேகத்தில் இருந்த நிலையில், வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதகஜராஜா படத்தில் விஷால் பாடிய ’டியர் லவ்வர்’ பாடலை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி தீர்த்தனர். அதேபோல் 12 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், சந்தானம் காமெடிக்கு திரையரங்கில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர்.