சென்னை: ’புஷ்பா 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று (டிச.05) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
சந்தன மரக் கடத்தல் மையக்கதையாக கொண்டு புஷ்பா திரைப்படம் உருவாக்கப்பட்டது. புஷ்பா முதல் பாகம் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தேசிய விருது பெற்றார். இந்நிலையில் ’புஷ்பா 2’ திரைப்படத்தில் kissik song, peelings உள்ளிட்ட பாடல்கள் படம் வெளியாகும் முன்பே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் இன்று மிகப்பெரிய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது. அதுவும் புஷ்பா 2 திரைப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. புஷ்பா 2 திரைப்படம் ஓடும் நேரம் 3 மணி 20 நிமிடங்கள் ஆகும். நேற்று புஷ்பா 2 சிறப்புக் காட்சியை நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர்.