சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தங்கம் கடத்தல் தொடர்பான கதை என கூறப்படும் நிலையில், கூலி திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் தற்போது மிகவும் பிரபலமான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ’கூலி’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற்ற coolie disco பாடல் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், ’கூலி’ படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடித்து வருகிறார். இதுகுறித்து உபேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து எடுத்துள்ளார். மேலும், அது சிறிய கதாபாத்திரமாக இருக்கலாம் என தெரிகிறது.