சென்னை: அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து அஜித் விடாமுயற்சி மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக குட் பேட் அக்லி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
அஜித் படம் மூன்று வருடங்களுக்கு பிறகு வருகிறது என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்த நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக விடாமுயற்சி டிரெய்லர் வரும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நடந்தது வேறு, லைகா புரொடக்ஷன்ஸ் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.