சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு மமிதா பைஜூ ஜோடியாக நடிக்கவுள்ளார். இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான நகைச்சுவை திரைக்கதை மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்னர் பிரதிப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘லவ் டுடே’.
இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்னர் பெரிய நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ’டிராகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் சுதா கொங்குராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் தெலுங்கு திரைப்படம் 'பிரேமலு' மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மமிதா பைஜூ தற்போது எச்.வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: 'கூலி' ரிலீஸ் தேதி, 'ஜெயிலர் 2'... ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்களை மனம் கவர்ந்த நடிகை மமிதா பைஜூயுடன் இளம் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.