"எனக்குள்ளே நிறைய மாற்றத்தை மாஸ்டர் உண்டாக்கியுள்ளார்" சென்னை: நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில், அவரின் அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்களுடன் இணைந்து ‘மாற்றம்’ என்ற சேவை அமைப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
மேலும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்து, மாற்றம் அமைப்பில் விவசாயம், கல்வி, மருத்துவத்துக்குத் தேவையான பல்வேறு உதவிகளை செய்ய உள்ளனர். இந்த நிலையில், இதன் தொடக்க விழா இன்று (மே.1) சென்னையில் நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், அவரது அம்மா, எஸ்.ஜே.சூர்யா, அறந்தாங்கி நிஷா, செஃப் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கப்பட்டது. பின்னர் ராகவா லாரன்ஸ் பேசுகையில்,"இந்த நாள் மிகவும் சந்தோஷமான நாள். நான் எல்லாப் படமும் முடிந்தபிறகு கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம். ஒருநாள் ஒரு கனவு வந்தது. அதுதான் இந்த மாற்றத்திற்கு காரணம்.
நான் அதைச் செய்யப் போகிறேன், இதைச் செய்யப் போகிறேன் என்று சொல்வதை விட செயலில் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று முதல் அந்த மாற்றம் ஆரம்பம். இந்தச் சேவையில் இணைந்த செஃப் வினோத்துக்கு நன்றி. அறந்தாங்கி நிஷாவுக்கும் நன்றி. எஸ்.ஜே.சூர்யாவுடன் பழகி கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது.
ஒரு நாள் போன் செய்து மாற்றத்தில் இணைகிறேன் என்றார். இது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக உணர்ந்தேன். நான் எங்கு அழைத்தாலும் வருகிறேன் என்றார். சினிமாவில் மட்டுமல்ல, மாற்றத்திலும் லக்கியான ஜோடியாக அமைந்தது. எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது குடும்பத்தினருக்கும் நன்றி" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவிடம் ஒரு டிராக்டர் வழங்கினார் ராகவா லாரன்ஸ். இதனை அவரது ஊரில் விவசாயிகள் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், "நடிகர் ராகவா லாரன்ஸ் கஷ்டப்பட்டு முன்னேறியவர். நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றில்லாமல், மற்றவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.
மிகப்பெரிய சக்தியும், உறுதியான எண்ணமும் இருந்தால் தான் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்ய முடியும். நான் யாரிடமும் அதிகம் நெருங்கிப் பழகியது கிடையாது. நடிகர் ராகவா லாரன்ஸின் நல்ல மனது காரணமாக அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டேன். எனக்குள்ளே நிறைய மாற்றத்தை மாஸ்டர் உண்டாக்கியுள்ளார்" என்று பேசினார். பின்னர் பேசிய ராகவா லாரன்ஸ் அம்மா, "இந்த மாற்றம் சேவையை அரசியல் ஆக்கிடாத" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் அரசுப் பேருந்து கதவு கழன்று விழுந்ததில் பெண் பயணி காயம்! - Government Bus Door Fell Off