சென்னை: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக வளர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், நடிப்பு மட்டுமின்றி நல்ல கதைகளைத் தேர்வு செய்து தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கும் 'குரங்கு பெடல்' படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடவுள்ளது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் டீசருடன், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த டீசரில், தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980களின் கோடைக்காலத்திற்குப் பார்வையாளர்களைப் படம் கொண்டு செல்கிறது. சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை அந்த டீசர் வெளிக்காட்டுகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கமலக்கண்ணன் படம் உருவாக்குவதில் தனது புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பாணிக்காகப் பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘மதுபானக்கடை’, ’வட்டம்’ போன்ற படங்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. கடந்த 2012 இல், அரவிந்தன் புரஸ்காரத்தில் சிறப்புக் குறிப்புடன் சிறந்த அறிமுக இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டார் கமலக்கண்ணன்.