சென்னை: ’நேசிப்பாயா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "நான் இந்த விழாவிற்கு வந்தது முக்கிய காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் சிநேகா ப்ரிட்டோ மற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன் தான். இப்படத்தின் தொடக்க விழாவிற்கு அவர்கள் அழைத்த போது என்னால் வர முடியவில்லை. மேலும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ எவ்வளவு நல்ல மனிதர் என்பதை கேள்விப்பட்டுள்ளேன். அவர் மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதை, தொழில் சார்ந்த விஷயங்களில் நடந்து கொள்ளும் விதம் என ஒரு நல்ல மனிதராக கேள்விப்பட்டுள்ளேன்” என்றார்.
பின்னர் தனது மாமனார் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “நாம் வாழ்க்கையில் தாய், தந்தை, நண்பர்கள் என அனைத்து உறவுகள் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும் போது பாராட்டி பேசி விடுவோம். ஆனால் மாமனார் என்பது ஒரு ஸ்பெஷலான உறவு. நடிகர் ஆகாஷுக்கு அவ்வாறு அமைந்துள்ளது, உங்களுக்கு நல்ல மாமனாராக சேவியர் ப்ரிட்டோ கிடைத்துள்ளார். ஏனென்றால் என் மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், எனக்கு அவரது மகளை கொடுத்தது பெரிய விஷயம். இப்போதுள்ள தொகுப்பாளர்கள் பாலா, ஏஞ்சலின் ஆகியோர் லட்சத்தில் சம்பளம் வாங்கின்றனர்.
ஆனால் நான் தொகுப்பாளராக இருந்த போது எனக்கு 4500 ரூபாய் தான் கிடைக்கும். அப்போது என்னை நம்பி அவரது மகளை திருமணம் செய்து வைத்தார். நான் சினிமாவில் சாதிப்பேன் என் மாமனார் என்னை நம்பினார்” என கூறினார். இதனைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “நேசிப்பாயா பாடல்கள் பயங்கரமாக உள்ளது. யுவன், விஷ்ணு காம்போ குறித்து சொல்லவே தேவையில்லை. அது மேஜிக்கல் கூட்டணி. எனது கல்லூரி காலத்தில் இரண்டு பொழுபோக்குகள் தான் ஒன்று சினிமா பார்ப்பது, மற்றொன்று கேசட்கள் வாங்கி பாடல்கள் கேட்பது.