சென்னை: ’அமரன்’ திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த ’அமரன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் ’வெண்ணிலவு சாரல்’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் பிளே லிஸ்டில் வலம் வருகிறது. மேஜர் முகுந்தாக நடித்த சிவகார்த்திகேயன், முகுந்தின் மனைவியாக நடித்த சாய் பல்லவி ஆகியோரின் கதாபாத்திரம் பெரும் பாராட்டுக்களை பெற்றது.
திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலர் அமரன் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை இல்லாத அளவு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின் படி அமரன் இதுவரை இந்திய அளவில் 154.51 கோடி வசூல் செய்துள்ளது.