சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில், சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசயமைத்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு, கங்குவா படத்தின் முதல் சிங்கிள் 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பின்னர், கங்குவா படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி தசரா விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காது என்ற சூழல் நிலவுவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க:வீக் எண்ட்ல எந்த படத்துக்கு போலாம்னு ப்ளான் பண்ணுங்க.. இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்! - this week release kollywood movies
இதனைத் தொடர்ந்து, கங்குவா திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா கூறினார். இந்நிலையில், கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.