சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம், தற்போது பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ’மதகஜராஜா’ உடன் ஷங்கர் இயக்கிய ’கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ’வணங்கான்’, ’மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களும் வெளியாகியுள்ளது.
மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவருவதால் ’மதகஜராஜா’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. மேலும் 12 வருடங்கள் முன்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்போது வெளிவரும் புதிய படங்களுடன் எப்படி போட்டியிட இருக்கிறது என சந்தேகமும் இருந்து வந்தது. இந்நிலையில் மதகஜராஜாவின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
சாக்னில்க் (Sacnilk) இணையதளம் அறிக்கையின்படி ‘மதகஜராஜா’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 3.1 கோடி வசூல் செய்துள்ளது. இது ’கேம் சேஞ்சர்’ தமிழ் பதிப்பின் முதல் நாள் வசூலைவிட அதிகமாகும். கேம் சேஞ்சரின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக 51.25 கோடியாக இருந்தாலும் தமிழில் 2.1 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
Thank u all 🙏❤️#MadhaGadhaRaja #SundarC @VishalKOfficial pic.twitter.com/ZQNEgSnotg
— Santhanam (@iamsanthanam) January 12, 2025
நீண்ட இடைவெளிக்குப் பின் பாலாவின் இயக்கத்தில் வந்த ’வணாங்கன்’திரைப்படமும் முதல் நாளில் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியிருக்க மதகஜராஜாவின் இத்தகைய வசூலை திரையரங்க உரிமையாளர்களில் ரசிகர்கள் வரை இருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இதற்கு முன்பு மிகவும் காலதாமதாக திரையரங்குகளுக்கு வந்த ’வாலு’, ’நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற தமிழ்ப்படங்கள் எதுவும் இவ்வளவு வசூல் செய்ததில்லை.
நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ’மதகஜராஜா’ வெற்றிக்கு காரணம், நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானத்தின் கவுண்டர் நகைச்சுவைதான் என ரசிகர்களிடையே கூறப்படுகிறது. மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன் ஆகியோரின் நகைச்சுவையும் படத்திற்கு பலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனது அன்பான அஜித்குமார்... உணர்வுபூர்வமாக வாழ்த்திய ரஜினிகாந்த்
இந்நிலையில் சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ’காதலிக்க நேரமில்லை’, ’நேசிப்பாயா’ என மேலும் சில படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் பொங்கல் வின்னராக ’மதகஜராஜா’ கொண்டாடப்பட்டு வருகிறது.