சென்னை: துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஜித்குமாரின் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்குமாரின் கார் பந்தய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிப்பிற்கிடையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்த அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் தமது தலைமையில் ஓர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கினார். இந்த அணி துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று தற்போது மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்த செய்திகள், வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் தனது வாழ்த்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”என் அன்பான அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்துள்ளீர்கள். இறைவனின் ஆசிர்வாதமும் எனது நேசங்களும்” என வாழ்த்தை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
நேற்று கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "அஜித்குமார் அணியினர் முதல் பந்தயத்திலேயே அசாதாரணமாக சாதனை படைத்துள்ளனர். தனது எல்லைகளைத் தாண்டி பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களை நோக்கி செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய (motorsports) விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க தருணம்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports. pic.twitter.com/DsuCJk4FFB
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2025
வெற்றிவாகை சூடியுள்ள அஜித்குமாருக்கு, நடிகர் மாதவன் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜெர்சியுடன் தேசியக்கொடியை உணர்ச்சி பொங்க கையில் பிடித்தபடி உள்ள அஜித்தை, நடிகர் மாதவன் பெருமிதத்துடன் கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், நடிகர்கள் சிவகார்த்திகேயன், கவின், சாந்தனு என தமிழ் பிரபலங்கள் மட்டுமல்லாமல் நாக சைத்தன்யா போன்ற பல்வேறு மொழியைச் சார்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Yes. When it was declared the joy knew no bounds.#ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #racing pic.twitter.com/HrmMGrz93F
— Suresh Chandra (@SureshChandraa) January 12, 2025
முன்னதாக போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வீரர்களுடன் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித்குமார், தேசிய கொடியுடன்ரசிகர்களுக்கு மத்தியில் மைதானத்தை வலம் வந்தார். பரிசளிப்பு நிகழ்வின்போது தனது வெற்றிக்கோப்பையை மகனின் கைகளில் கொடுத்து மகிழ்ந்தார் அஜித்குமார். அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தார், நடிகர் மாதவன் ஆகியோர் போட்டியை நேரில் காண சென்றிருந்தனர்.
இதையும் படிங்க: கார் பந்தயம், ரசிகர்கள்: நடிகர் அஜித் குமாரின் புதிய வீடியோ வைரல்!
தற்போது நடிகர் அஜித்குமார் நடிப்பில் ’விடாமுயற்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. பட வெளியீடு தாமதமானாலும் அஜித்குமாரின் கார் பந்தயம் தொடர்பான இச்செய்திகளும் சமூகவலைதளங்களில் பரவும் வீடியோக்களும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.