சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது படத்தில் பாடல்களே மிகப் பிரமாண்டமான முறையில் எடுக்கப்படும். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்திருந்தார்.
இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோரும், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்களை இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் கொலை செய்வதும், பெற்ற மகனே தவறு செய்தாலும் தண்டிக்கும் நபராக கமல்ஹாசன் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். அதேநேரம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.