சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் ஏழாவது முறையாக தேசிய விருது வென்றுள்ளார். மேலும் அதிக தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் 7 விருதுகளையும், இளையராஜா 5 விருதுகளையும் வென்றுள்ளார்.
அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ’ரோஜா’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 22 வருடம் நிறைவு செய்துள்ளது. இதன்மூலம் திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் கால் பதித்து நேற்றுடன் 22 வருடம் நிறைவு செய்துள்ளார். 22 வருடம் ஆகியும், பல தலைமுறைகள் இசை ரசனைகள் கடந்தும் இன்று வரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் தன்னை புதுப்பித்து கொண்டே வருகிறார்.
வரலாற்று படமாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப ரீதியில் சவாலான கதையாக இருந்தாலும் சரி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை கவர தவறுவதில்லை.
'ரோஜா': 1992இல் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். ரோஜா பட பாடல்கள் சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே ஆகியவை அப்போது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அப்படத்திற்கு முதல் முறை சிறந்த இசையமப்பாளருக்கான தேசிய விருதை வென்றார்.
’மின்சார கனவு’: 1997ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சார கனவு' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டாவது முறையாக தேசிய விருது வென்றார். இப்படத்தில் இடம்பெற்ற வென்னிலவே, மானா மதுரை, அன்பென்ற மழையிலே என மெலடி, ரெட்ரோ, ஃபோக் அனைத்து விதமான இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். மேலும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய இசைக் கருவிகள் புது விதமான அனுபவத்தை தரும். பாடல்களில் வரிகளை விட இசைக் கோர்ப்பு அதிகமாக இருக்கும்.
’லகான்’: ஏ.ஆர்.ரஹ்மான் தனது திரை வாழ்வில் ஆரம்ப கட்டத்திலேயே பெரும் வளர்ச்சி அடைந்த நிலையில், வேறு பல மொழிகளிலும் இசையமைக்க தொடங்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் இந்தி திரைப்படமான 'ரங்கீலா' (rangeela) பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து பல இந்தி படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், 2001இல் அமீர்கான் நடிப்பில் வெளியான ‘லகான்’ (lagaan) படத்திற்காக மூன்றாவது முறையாக தேசிய விருது வென்றார். இப்படத்தில் 'கனம் கனம்’, ‘சலே சலோ என பல பாடல்கள் மிகவும் பிரபலம்
‘கன்னத்தில் முத்தமிட்டால்’: மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. இலங்கை ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து அழுத்தமாக பேசப்பட்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை உயிரூட்டியது. 'வெள்ளை பூக்கள்', 'கன்னத்தில் முத்தமிட்டால்' பாடல்கள் கேட்டால் இன்றளவும் மனதில் ஒரு அமைதியை ஏற்படுத்தும். அதேபோல் 'விடை கொடு எங்கள் நாடே' பாடல் இலங்கை தமிழர்களின் வலியை பிரதிபலிக்கும்.