சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் விஜய் சேதுபதி திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர் நீர்ப்பறவை, தர்ம துரை, மாமனிதன் என மண் வாசனையுடன் மனித உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தும் படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது ஏகன் என்ற புதுமுக நடிகர் நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தை இயக்கி வருகிறார்.
சீனு ராமசாமி இயக்குநர் மட்டுமின்றி கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உடையவர். இவரது கவிதை தொகுப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் சீனு ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்' நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், "என்னை கதாநாயகனாக மாற்றிய என் ஆசானின் நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி.
நான் உப்பு சிறு வயதில் வாங்கிய போது 1 படி 1 ரூபாயாக இருந்தது. அப்போது அவருக்கு ஒரு நாள் சம்பளம் 15 ரூபாய் இருக்கும், அதை எல்லாம் ரொம்ப அழகாக எழுதி இருக்கிறார். இந்த நூலில் சில கவிதைகள் புரிந்தது. ஒரு சில கவிதைகள் கேள்விகளை எழுப்பி புரிய வைப்பது போல் இருந்தது. என் வாழ்க்கையில் வந்த ஆசான்களில் இயக்குநர் சீனு ராமசாமி முக்கியமானவர். எளிய மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை இப்போதும் இந்த கவிதை வெளியீட்டு விழா மூலம் புரிய வைத்துள்ளார்" என்று பேசினார்.