கலிபோர்னியா:வளர்ந்து வரக்கூடிய நவீன தொழில்நுட்பங்களில் அசுர வளர்ச்சியை கண்டு வருவது ஏஐ( AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). இந்த திறனை பயன்படுத்தி ChatGPT பல்வேறு இணையதள சேவைகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில் ChatGPT-4o மாடல் தனது குரலைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக அமெரிக்கா நாட்டின் திரைப்பட நடிகையும், பாடகருமான ஸ்கார்லெட் ஜோஹான்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏஐ குரல் எண்ணுடையது?இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,"கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் எனக்கொரு ஆஃபர் கொடுத்தார். அதாவது தற்போதைய ChatGPT-4oவின் ‘ஸ்கை’ வாய்ஸ் சிஸ்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என என்னிடம் கேட்டார்.
இந்த அமைப்பிற்கு நான் குரல் கொடுப்பதன் மூலம், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை என்னால் குறைக்க முடியும் என்றும், மனிதர்கள் மற்றும் AI இடையிலான உரையாடல் சுமுகமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மிகவும் பரிசீலித்த பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக, நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் இருக்கும் நிலையில் எனது குரலைப் பிரதிபலிக்கும் வகையில் ChatGPT-4o வின் ‘ஸ்கை’ வாய்ஸ் (Sky Voice) இருப்பதாக என்னுடைய குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அந்த டெமோ குரலை கேட்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த எந்திர குரலுக்கும் எனது குரலுக்கும் எந்த வித்தியாசங்களையும் என்னுடைய பழகியவர்களால் கூட அடையாளம் கான முடியாத அளவு உள்ளது. இது தொடர்பாக சால் ஆல்ட்மேன் மற்றும் OpenAI நிறுவனத்திடம் சட்டரீதியாக விளக்கம் கேட்டு உள்ளேன். அதோடு ஸ்கை வாய்ஸை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளேன் என நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் தெரிவித்து இருந்தார்.