மும்பை: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு திரும்பினார். கடந்த வியாழக்கிழமை (ஜன.16) அதிகாலை 2.30 மணியளவில் பாந்த்ராவில் உள்ள சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரோடு சண்டையிட்டதில் அவர் படுகாயடைந்தார். தொடர்ந்து ஆறு முறை பலமாக கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான், இரத்த வெள்ளத்தில் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து நாட்களான நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.21) பிற்பகல் மருத்துவமனையில் இருந்து சைஃப் அலி கான் வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும் அவர் முழுவதும் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்திருக்கும் அவரது குடியிருப்பைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வியாழனன்று நடந்த தாக்குதல் குறித்து சைஃப் அலி கானிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமில்லாமல் தாக்குதல் நிகழ்ந்த போது நடந்தவற்றை காவல்துறையினர் முன்பு மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளார் சைஃப் அலி கான் எனவும் கூறப்படுகிறது.