சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் மட்டும் 9 திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் யாரும் இதுவரை பேசாத காதல் கதையை ’காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் மூலம் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையை மிக இயல்பான கதையாக நம்மிடையே சொல்லும் முயற்சியில் ’காதல் என்பது பொதுவுடமை’ உருவாகியுள்ளது. அத்தகைய காதலை பொதுச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என உரையாடலை மிகத் தைரியமாக படக்குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
தன் பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளை குடும்பத்தில் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த அளவிற்கு போராடுகின்றனர். இறுதியில் சமூகத்தினர் என்ன சொல்கிறார்கள் என்று நினைப்பதை விட ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே படத்தின் மையக் கருத்தாக அமைகிறது.
இப்படத்தில் சாம், நந்தினி என்ற கதாபாத்திரங்கள் நடிகைகளான லிஜோமோல் ஜோஸ், அனுஷா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ரோகினி சாமிற்கு அம்மாவாகவும், வினித் அப்பாவாகவும் நடித்துள்ளார். சாம், நந்தினி இவர்களின் நண்பனாக கலேஷ் நடித்துள்ளார். இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக மெரி என்ற கதாபாத்திரத்தில் தீபா நடித்துள்ளார். இந்த ஆறு கதாபாத்திரங்கள் படம் முழுதும் ஆக்கிரமிக்கின்றன.
படத்தில் எந்த விதமான முகம் சுளிக்கவைக்கும் காட்சிகள் இடம் பெறாமல் அனைவரையும் ஆர்வமாக பார்க்க வைத்தது படத்தின் பக்கபலம் என்று கூறலாம். இயக்குநர், திரைக்கதை மூலம் எந்த இடத்திலும் சலிப்படைய வைக்காமல் ஆர்வமாய் கதையை நகர்த்தி செல்கிறார். முற்போக்காக பெண்ணியம் பேசும் பெண்கள், தன் மகள் இன்னொரு பெண்ணை காதல் செய்கிறேன் என்று சொன்னால் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது இந்த படத்தில் முக்கியமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவின் கம்பீர குரலில் 'கிங்டம்' டீசர்... விஜய் தேவரகொண்டா புதிய பட அறிவிப்பு - KINGDOM TITTLE TEASER
நாம் வாழும் பொது சமுதாயத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் இந்த படம் பதிலாக அமைந்துள்ளது. தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு இப்படம் நம்பிக்கையாக அமைந்துள்ளது. ஆனாலும் அவர்களை இந்த சமூகம் எவ்வாறு நடத்தும் என்ற அச்சத்தில் வெளியே வர தயங்குகின்றனர் என்ற கருத்தோடு நிறைவடைகிறது.