சென்னை: கங்குவா படத்தில் பின்னணி இசை குறித்து பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி விமர்சித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது.
சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. நேற்று கங்குவா திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் கங்குவா படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எரிச்சலூட்டும் விதத்தில் இருந்ததாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். கங்குவா படம் முழுவதும் தேவை இல்லாமல் இரைச்சல் சத்தம் கேட்டு கொண்டே இருந்ததாகவும் ஆடியன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கங்குவா திரைபடத்தின் பின்னணி இசை குறித்து ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி பதிவிட்டுள்ளார். அதில் “ஆடியோ இன்ஜினியராக பணிபுரியும் எனது நண்பர் ஒருவர், எனக்கு கங்குவா பற்றி கிளிப்பிங்கை அனுப்பினார். நமது பிரபலமான படம் ஒன்றில் ஒலி குறித்து இவ்வாறு விமர்சனம் வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.