சென்னை: தமிழ் சினிமாவின் 90களில் வெளியான என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி போன்ற படங்கள் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராஜ்கிரண். இன்று வரையிலும் அப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகள், பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், 74 வயதிலும் அதற்கேற்ற நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் பகிரப்படுகின்றன. குறிப்பாக, பா.பாண்டி, சண்டக்கோழி, கொம்பன், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில், நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, சின்னத்திரை நடிகர் முனிஷ்ராஜா என்பவரை ரகசியத் திருமணம் செய்து கொண்டார். அது தொடர்பாக, நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க:நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
அதில், பிரியா என்பவருக்கும், தனக்கும் இடையேயான உறவு, முனிஷ்ராஜா எப்படி பிரியாவை திருமணம் செய்து கொண்டார் ஆகியவற்றை குறித்து பதிவிட்டு இருந்தார். மேலும், தனது வளர்ப்பு மகளுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும், எந்த ஒரு பொது தளத்திலும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது எனவும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, முனிஷ்ராஜாவுக்கும், தனக்கும் இடையேயான திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை எனவும், இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திருமணத்திற்குப் பிறகு எனது அப்பா ராஜ்கிரணை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன்.
அப்படி அவரை கஷ்டப்படுத்தியும், எனக்கு பிரச்னை என வந்தபோது என்னைக் கைவிடாமல் நின்று காப்பாற்றினார். அவரிடம் நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அது பத்தாது, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் டாடி" என கண்ணீர் மல்க அழுதபடி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தனது தந்தையிடம் மன்னிப்பு கோரி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:பல்வேறு எதிர்பார்ப்புகளை குவித்து வரும் நரேனின் “ஆத்மா” படம்! எப்போது ரிலீஸ்?