சென்னை: இன்று தொடங்கும் ’கூலி’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த், அமீர்கான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் முதன்மையாக இருக்கும் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.
இப்படம் தங்கம் கடத்தல் குறித்த கதை என கூறப்படும் நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ’தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கூலி திரைப்படம் தனிக்கதை எனவும், இப்படம் தனது LCU யுனிவர்சில் இடம்பெறாது என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் கோட், அமரன் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வசூலை பெறாத நிலையில், அடுத்த வருடம் வெளியாகும் கூலி திரைப்படம் ’ஜெயிலர்’ போல அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.