சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்.30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது வயிற்று வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார் எனவும், இதயவியல் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, அக்டோபர் 1ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனை தரப்பில் ரஜினியின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்த் நேற்று (செப்.30) சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் (Aorta) இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வீக்கத்தை மருத்துவர் சாய் சதீஷ் அறுவை சிகிச்சை இல்லாத (Transcatheter) Stent முறையில் சரி செய்துள்ளார். ரஜினிகாந்தின் நலம் விரும்பிகளுக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சையை தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் தற்போது நன்றாக உள்ளார். அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என கூறப்பட்டிருந்தது.
மேலும், ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்.10-ம் தேதி உலகெங்கும் விரைவாகியுள்ளது.