சென்னை:தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ், திரையுலகை தாண்டி நிஜவாழ்வில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பல ஆதரவற்ற குழந்தைகள், ஏழை குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில்,தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலுக்கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் அவர் பேசுகையில், “எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது, இந்த மாற்றுத்திறனாளி குழுவினர்தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்துப் பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன்.
சினிமாவில் சிலநேரம் ஒரே மாதிரி இருக்கிறதே இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் மாஸ்டர் என்பார்கள், 'நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே.. அதுபோல், நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும்' என்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன்.