ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், சுனில் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு 'புஷ்பா தி ரூல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'பையரிங்' பாடல் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி காலை 11.07க்கு வெளியாகும் என ப்ரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் 'புஷ்பா புஷ்பா' என்ற வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. இந்தப் பாடலைப் பாடியவர் குறித்த தகவலை படக்குழு தெரிவிக்கவில்லை.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்டது. முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகமான 'புஷ்பா தி ரைஸ்' படம் வெளியாகி, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஸ்ருதிஹாசன் - லோகேஷ் நடித்த 'இனிமேல்' ஆல்பம் - 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை! - Inimel Album Song