சென்னை: தமிழ் சினிமாவில் சாமானிய மனிதர்களின் யதார்த்தமான கதைகளையும், உணர்வுகளையும் அதன் உண்மைத் தன்மை மாறாமல் கூறுவதில் பெயர் பெற்றவர் சீனு ராமசாமி. இவரது படங்கள் மனித உணர்வுகளை பேசும் படங்களாக இருக்கும். இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை, இன்றளவும் கிளாசிக் திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஷன் சினிமாஸ் டாக்டர் அருளானந்து தயாரித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இப்படம் இம்மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளி வருகிறது. இதில் ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா, லியோ சிவக்குமார், சத்யா தேவி புலிக்குட்டி தினேஷ் இயக்குனர் நவீன் ஆகியோர் நடித்துள்ளனர். கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், வேர்ல்ட் ப்ரீமியர் அந்தஸ்தில் வரும் 18ஆம் தேதி இரவு வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை முத்தமிழ் கலைச்சங்கமம், புதுவையின் மாபெரும் தமிழ் அறிஞர்களின் ஒருவரான தமிழமல்லான் முன்னிலையில், புதுச்சேரி முதல்வருக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் சார்பில், தமிழ் கலைச்சங்கமத்தின் தலைவர் ஆரா திரையிட்டார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இத்திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்து தன் வாழ்த்துகளை இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுக்கு தெரிவித்தார்.