சென்னை: நடிகர் ராமராஜன் தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டிப் பறந்த நடிகர். இவரது படங்கள் பாடல்களுக்காகவே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் (credits - ETV Bharat Tamil Nadu) இயக்குநர் ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்தை எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். படம் இந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனை திரையில் பார்த்ததால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், படம் குறித்து தயாரிப்பாளர் மதியழகன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தரமான படத்தைக் கொடுத்த மகிழ்ச்சி உள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் மக்கள் உணர்வுப்பூர்வமாக படத்தைக் கொண்டாடுகின்றனர். படத்தை பெண்கள் கொண்டாடுவார்கள் என்று ராமராஜன் சொன்னது இப்போது நிஜமாகியுள்ளது.
கிராமத்தில் இவரது படம் நன்றாக ஓடும். ஆனால், நகர்புறங்களில் மக்கள் ஸ்நாக்ஸ் சாப்பிடத்தான் வருகிறார்கள் எனக்கூறி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் தர மறுக்கிறார்கள். 2k கிட்ஸ்களுக்கு ராமராஜனை தெரியாது என்கின்றனர். மேலும், காட்சிகள் குறைவாகக் கொடுக்கின்றனர்.
சாமானியன் படம் நடுத்தர மக்களின் வலியை பேசும் படம். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்வையாளர்களைத் தரம் பிரிக்கின்றனர். நல்ல படங்களை ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பார்கள் என்பது எனது கருத்து. கார்ப்பரேட் சிஸ்டத்திற்குள் நம்மைக் கொண்டு செல்கின்றனர்.
தயாரிப்பாளர்கள் யாரும் பிழைப்பதில்லை. நாங்கள் எல்லோருக்கும் தான் படம் எடுக்கிறோம். ஆனால், அவர்கள் பிரிக்கிறார்கள். தயாரிப்பாளர் கவுன்சில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை. இது வலி தருவதாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் தூங்கிக் கொண்டுள்ளது.
சாமானியனின் கதையைச் சொல்லும் நாயகனும் சாமானியனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை சொன்னதும் அவருக்குப் பிடித்துவிட்டது. படத்தின் பெயர் நரைமுடி என்றதும் நடிக்க மாட்டேன் என்றார். சாமானியன் என்றதும் அவருக்குப் பிடித்துவிட்டது.
இளையராஜா இசைக் கடவுள். ராமராஜனும், இளையராஜாவும் ஒருவருக்கொருவர் நேசிக்கின்றனர். இருவருக்கும் அப்படி ஒரு காதல். படத்தில் பாடல் இல்லை என்றதும் அவரே ஒரு சூழ்நிலையை உருவாக்கி அழகான பாடல்கள் போட்டுக் கொடுத்தார். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது ராமராஜன். இன்னும் உடம்பு குறைக்க வேண்டும் என்று அன்பாக சொன்னார். ஒரு படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கே சொந்தம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ராமராஜனின் சாமானியன் திருட்டு கதையா? - கதாசிரியர் கார்த்திக் குமார் பிரத்யேக பேட்டி! - Saamaanian Film Story Issue