சென்னை: ப்ளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.
மேலும், இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளனர். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தனது ஏழ்மையினால் அரேபிய தேசத்திற்கு புலம்பெயரும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர், அங்கு பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து உயிர் பிழைத்தாரா என்பதே கதைக்கருவாகும்.
இப்படத்தின் அசர வைக்கும் காட்சியமைப்புடன் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், வறண்ட பாலைவனத்தில் உயிருக்குப் போராடும் கதாபாத்திரத்திற்காக பிருத்விராஜ் தனது உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு சவால்களைச் சந்தித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வந்தது. கரோனா லாக்டவுனில் ஜோர்டான் நாட்டு பாலைவனத்தில் 60 நாட்கள் சிக்கிக் கொண்ட ஆடுஜீவிதம் படக்குழு, அங்கு எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்தும், பின்னர் இருநாட்டு அரசு உதவியுடன் மீண்டது குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம் ஆகிய மலையாள திரைப்படங்களின் வரிசையில் ஆடுஜீவிதம் படமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "குடிகார பொறுக்கிகள்" - மஞ்சும்மல் மட்டுமல்ல மலையாள கரையோரத்தையே விமர்சிக்கும் ஜெயமோகன்