சென்னை: ’விடுதலை 2’ குறித்து அர்ஜூன் சம்பத் கூறிய கருத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’ இப்படம் நடிகர் சூரியின் திரை வாழ்வில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ’விடுதலை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி, தனது அசாத்தியமமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். இதனைத்டொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் ’விடுதலை 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ’விடுதலை 2’ திரைப்படம் கம்யூனிஸம் பிரச்சாரம் போல உள்ளதாகவும் ஒரு சில விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் ’விடுதலை 2’ படத்தை கடுமையாக விமர்சித்தார்.
அவரது பதிவில், “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ கவனம் செலுத்த வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.