கரூர்: பள்ளபாளையம் கிராமத்தில் சுமார் நான்கு தலைமுறைகளாக சுடுகாடு இல்லாமல் மக்கள் தவித்து வருவதாகவும், இறந்த நபர்களை முறையாக புதைக்க இடமில்லாமல் கழுத்தளவு தண்ணீரைக் கடந்து ஆற்றங்கரையில் புதைப்பதாகவும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், ஆறடி நிலத்திற்கு ஆட்சியரை தேடி வந்து மனு கொடுத்துச் சென்றுள்ளனர்.
அதாவது, கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்மங்கலம் தாலுகா பள்ளபாளையம் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு, சுமார் நான்கு தலைமுறையாக இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆறடி நிலம் கூட இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு நிலம் இல்லாமல், அங்கு செல்லும் ராஜாவாய்க்கால் கரையோரம் புதைத்து வருவதாகவும், அதற்காக கழுத்தளவு தண்ணீர் சடலத்துடன் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்வதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தங்களுக்கு சுடுகாடு வசதி வேண்டும் என நேற்று முன்தினம் (டிச.23) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற நபர் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "பள்ளபாளையம் கிராமத்தில் நான்கு தலைமுறையாக வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரசும், அரசு அதிகாரிகளும், அங்கு வசிக்கும் மற்ற சமூக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அடிப்படை வசதிகளை வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்" எனக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், "இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு மார்பளவு தண்ணீரில் சுமந்து சென்று, அங்குள்ள ராஜாவாய்க்கால் கரையில் புதைக்கும் அவல நிலை நீடித்து வருவதாகவும், அதனால் தங்களுக்கு புதைப்பதற்குச் சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்" எனத் அதெரிவித்தார்.
கழுத்தளவு தண்ணீரைக் கடந்து சென்றுதான் சடலத்தைப் புதைப்பதாக வேதனை தெரிவிக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், அரசு நத்தம் புறம்போக்கு நிலம் காலியாக உள்ள இடங்களை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அழித்துள்ளோம். இம்முறையாவது அதிகாரிகள் மனம் வைத்து, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தேனியில் ஆக்கிரமிப்பு சுடுகாட்டு பாதையை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!
மேலும், புதைப்பதற்கு கூட ஆறடி நிலம் கேட்டு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை கரூர் ஆட்சியர் நிறைவேற்றித் தர வேண்டும் என மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் அரசப்பன் கோரிக்கை மனுவினை அப்பகுதி மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருப்பதாகக் கூறுகிறார்.
இதுபோன்று, திருநெல்வேலி, தஞ்சாவூர், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் சில வகுப்பினரைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கென தனியாக சுடுகாடு இல்லாமல், இறந்தவர்களின் சடலங்களை முறையாக புதைக்க இடமில்லாமல் சிரமப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபாளையம் கிராம மக்கள் நிலம் கூட உள்ளது தங்களுக்கு சுடுகாடு ஏற்படுத்தித் தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ள சம்பவம் நேர்ந்துள்ளது.
இன்னும் தமிழகத்தில் வசிக்கும் பட்டியலின இன மக்களுக்கு சுடுகாடு வசதி கூட ஏற்படுத்தித் தர முடியாத நிலை நிலவுவதாகவும், அதிலும், அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்களின் சொந்த மாவட்டமான கரூரில், கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தைச் சுமந்து சென்று புதைக்கும் அவலமும், ஆறடி நிலத்திற்கு இன்னும் மனு கொடுத்து காத்திருக்கும் நிலையும் நீடிக்கிறது என்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.