தூத்துக்குடி: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ், பழனியை சேர்ந்த மகேஷ்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய 5 பேரும் திருப்பூரிலிருந்து புறப்பட்டு சுவாமிமலை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் நோக்கி ஆம்னி கார் ஒன்றி சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம் மேலக்கரந்தை பகுதியில், இன்று காலையில் கார் கடந்த போது ஓட்டுநர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பின்னால் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஒன்று ஆம்னி காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், கார் சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு, காரில் இருந்த செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மற்ற 2 நபர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/y42NEhJYE6
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 25, 2024
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமம், பொன்வேல் பெட்ரோல்பங்க் எதிரில் இன்று (டிசம்பர் 25) அதிகாலை திருப்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு TN38 BH 5794 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் ஓட்டுநர் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை - மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
அப்போது எதிர்பாராதவிதமாக பின்புறத்திலிருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 5 நபர்களில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38), செல்வராஜ் (வயது 38) மற்றும் விக்னேஷ் (வயது 31) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ராஜ்குமார் (வயது 35) மற்றும் மகேஷ் குமார் (வயது 33) ஆகிய இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.