சென்னை: மெய் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் 2ம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மற்றும் வசந்தபாலன் டீன்ஸ் (TEENZ) படக்குழுவுடன் கலந்து கொண்டனர். பின்னர், டீன்ஸ் மற்றும் ஜமா திரைப்படங்களின் முன்னோட்டம் திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறந்த படத்திற்கான மெய் விருது ரா.வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கிடா திரைப்படத்திற்கும், சிறந்த பட தொகுப்பாளர் விருது யாத்திசை திரைப்பட விஷுவல் எடிட்டர் மகேந்திரன் கணேசனுக்கும், சிறந்த நடிகர் விருது விடுதலை திரைப்பட நடிகர் சேத்தனுக்கும், துணை நடிகர் விருது பாக்கியம் சங்கருக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது அம்மு அபிராமிக்கும் பார்த்திபன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அபிராமி, "கலை என்கிற கதாபாத்திரம் எல்லா பெண்களின் வாழ்க்கைகளிலும் இருக்கிறது என நம்புகிறேன். அந்த கதாபாத்திரத்திற்கு பார்த்திபனின் கரங்களால் வாங்கிய விருது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
பின்னர் சிறந்த இயக்குநருக்கான விருது 'கூழாங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்-க்கு வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய அவர், "கூழாங்கல் 2019 ஆண்டு வெளியானது. ஆனால், அதற்கு 2024ஆம் ஆண்டு விருது கிடைப்பது பெரிய விஷயம்தான். இதுவரையில் மக்கள் நினைவு வைத்திருப்பதை மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன், "விருது என்பது முத்தம் போன்றது. அதை வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் தற்போது விருது கொடுத்த எனக்கு சந்தோஷமாக உள்ளது. விருதை வாங்கியவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். சமீபத்தில் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தது டீன்ஸ் (TEENZ) திரைப்படம் தான். எல்லாரும் ஒரு பேயை வைத்து படம் பண்ணுவார்கள், ஆனால் நான் 13 பேய்களை வைத்து படம் செய்துள்ளேன்.
பொதுவாக மக்கள் பெரிய நடிகர்களின் படங்களைப் பார்க்க முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால், நான் பெரிய நடிகர்களை உருவாக்கும் படங்களை இயக்குகிறேன். நிச்சயமாக இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் பெரிய நடிகர்களாக வருவார்கள். மிகப்பெரிய படம் என்பது திரைத்துறைக்குத் தேவையான விசயம்தான். ஆனால், கூழாங்கல், ஜமா, டீன்ஸ் மாதிரியான படங்கள் தான் சினிமாவை வாழ வைக்கிறது.
டீன்ஸ் போன்ற கதைகளை ஏன் பெரிய புரொடெக்சன் நிறுவனங்கள் தேர்வு செய்வதில்லை என்ற செய்தியாளரின் கேள்விக்கு, உங்களுக்கு என்னுடைய படங்கள் முன்மாதிரியாக இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சி. அதைத் தான் நானும் எதிர்பார்க்கின்றேன். சினிமாவுக்கு வந்தோம் சம்பாதித்தோம் போனோம் என இல்லாமல், கடைசி வரைக்கும் சினிமாவை லவ் பண்ணுவது என்பது கஷ்டமான விசயம். சினிமா பல நேரங்களில் என்னைக் கைவிட்டாலும், நான் விடமாட்டேன். தொடர்ந்து காதலிப்பேன்.