தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹீரோக்களாகும் ’பரிதாபங்கள்’ கோபி, சுதாகர்... புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ் அப்டேட் - PARITHABANGAL GOPI SUDHAKAR MOVIE

Parithabangal Gopi Sudhakar Movie Update: ’பரிதாபங்கள்’ யுடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு பிப்ரவரி 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் கோபி, சுதாகர்
பரிதாபங்கள் கோபி, சுதாகர் (Credits: Parithabangal X Account)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 10, 2025, 2:35 PM IST

சென்னை:தமிழ் இணைய உலகில் ‘பரிதாபங்கள்’ யுடியூப் சேனல் மூலமாக மிகவும் பிரபலமானவர்கள் கோபி, சுதாகர். இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்து அவர்களே நடிக்கும் படத்தின் தலைப்பு நாளை (பிப்.11) வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழில் யுட்யூப் சேனல் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்த காலத்தில் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யுடியூப் சேனலின் வழியாக பெருவாரியான மக்களை சென்றடைந்தவர்கள் கோபி, சுதாகர். அப்போது சமகால அரசியல் தலைவர்களையும் நிகழ்வுகளையும் தங்களது தனித்த பாணியில் பகடி செய்து பிரபலமடைந்தனர்.

பின்னர் அந்த யுடியூப் சேனலிலிருந்து வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அன்றாடம் நடக்கும் பல்வேறு விஷயங்களை பகடி செய்யும் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பரவலான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர். வருடங்கள் கடந்தாலும் இப்போதும் இந்த யுடியூப் சேனலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அடுத்தகட்டமாக 2019ஆம் ஆண்டு யுடியூப்பில் இருந்து திரைத்துறைக்கு நுழைய சில முயற்சிகள் எடுத்தனர் கோபி, சுதகார். அதில் ஒரு கட்டமாக அவர்கள் நடிக்கும் படத்தை அவர்களின் பார்வையாளர்களிடம் இருந்து க்ரவுட் ஃபண்டிங் மூலம் பணம் பெற்று அவர்களே தயாரிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதில் பல பிரச்சினைகள் வெடித்து அந்தப் படம் கைவிடப்பட்டது.

அந்த க்ரவுட் ஃபண்டிங்கில் ரூ.6 கோடிக்கும் அதிகமான நிதி வசூலானதாக கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்துக்கு ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என தலைப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் படத்தை கைவிட்டு இரண்டாவதாக ஒரு படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தனர் கோபி, சுதாகர் குழுவினர். கடந்த 2023ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கிய அந்தப் படத்தின் படப்பிடிப்பு அந்த ஆண்டே நிறைவடைந்து விட்டது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார்.

பட பூஜையின்போது இத்திரைப்படம் குறித்துக் கோபி - சுதாகர் கூறியதாவது, “இந்த கதையைக் கேட்டவுடன் இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது என புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் தான் படத்திலும் இருக்கும்.

ஆனால் அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கும் இப்படத்தில் இருக்கும். பரிதாபங்கள் வீடியோவில் பார்க்கும் கோபி சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றனர்.

இதையும் படிங்க:தனுஷ் இயக்கத்தில் ஜென் Z காதல் கதை... ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ டிரெய்லர் வெளியீடு

இப்படத்தில் கோபி, சுதாகருடன் விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை (பிப்.11) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details