சென்னை:அண்மை காலங்களாக பாலிவுட் திரைப்பிரபலங்கள் தென் இந்திய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும் டிரெண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஷாருக்கான்-அட்லி, ரன்பீர் கபூர்-சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, வருண் தவான்-அட்லீ கூட்டணியில் ஆக்ஷன் படமாக உருவாகும் "பேபி ஜான்" (Baby John) படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த கூட்டணி வரிசையில், ரன்வீர் சிங் மற்றும் பா.ரஞ்சித் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
மேலும், ரன்வீர் சிங் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர், ஆக்ஷன் திரைப்படம் குறித்து, கடந்த சில மாதங்களாகவே ஆலோசித்து வருவதாகவும், ரன்வீர் சிங் அதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், இவர்களது கூட்டணி குறித்தும், இவர்கள் இணைந்து உருவாக்கவுள்ள திரைப்படம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது பாலிவுட் என்ட்ரி குறித்து உறுதி செய்துள்ளார். நேர்காணல் ஒன்றில், ரன்வீர் சிங் உடன் இணைந்து படம் உருவாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் இந்தி படம் எடுக்கவுள்ளது உண்மை என்றும், அதில் நடிக்க உள்ள நடிகர்கள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார். முன்னதாக, இயக்குநர் பா.ரஞ்சித் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் (Birsa Munda) வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தயாராகிக் கொண்டு வருவதாக கூறப்பட்டது. மேலும், இந்த படத்தின் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தை தயாரித்து வருகிறார், இயக்குநர் பா.ரஞ்சித். அப்லாஸ் என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை அவர் தயாரித்து வருகிறார். இயக்குநர் மாரி செல்வராஜ், தனது முதல் படமான "பரியேறும் பெருமாள்" படத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்… ஹீரோயினாக பிரபல நடிகை ஒப்பந்தம்!