லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான "ஓப்பன்ஹெய்மர்". இந்த படம் வெளியான சமயத்திலிருந்தே படம் நிச்சயம் ஆஸ்கர் விருது வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அந்தவகையில், "ஓப்பன்ஹெய்மர்" படம் 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் 96வது ஆஸ்கர் விருது இன்று (மார்ச் 11) நடைபெற்றது. இவ்விழா துவங்கியதில் இருந்து அனைவரின் பார்வையும் "ஓப்பன்ஹெய்மர்" படத்தின் மீதுதான் இருந்தது. கடந்த ஆண்டு வெளியான "பார்பி" உள்ளிட்ட மற்ற பிரம்மாண்ட திரைப்படங்களையும் மிஞ்சி அதிக விருதுகளை வென்றது.
அந்தவகையில் சிறந்த படத்திற்கான விருது, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குநர் என 7 பிரிவுகளின் கீழ் "ஓப்பன்ஹெய்மர்" படம் விருதுகளை வென்று குவித்தது. இதில், இயக்குநர் கிர்ஸ்டோபர் நோலன், நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிலியன் மர்பி ஆகியோர் தங்களின் முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கிறிஸ்டோபர் நோலன், சிறந்த இயக்குநர் பிரிவில் 2017ஆம் ஆண்டு டன்கிர்க் (Dunkirk) படத்திற்காகவும், 2010ஆம் ஆண்டு இன்செப்சன் (Inception) படத்திற்காகவும் மற்றும் சிறந்த திரைக்கதைக்காக 2001ஆம் ஆண்டு மெமென்டோ (Memento) படத்திற்காக என மூன்று முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருதில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.