சென்னை: வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தங்கலான், டிமாண்டி காலனி, ரகு தாத்தா படங்கள் நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்கு பிறகு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. அந்த படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தங்கலான்:பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா, பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்க சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்டது முதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் வித்தியாசமான கெட்டப்பில் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 100 சதவீத உழைப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்திலும், நடிப்பிலும் பாராட்டை பெறும் விக்ரமின் நடிப்பை இப்படத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் விக்ரம் நடித்த படங்களில் தங்கலான் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கலான் படத்தில் பார்வதி, பசுபதி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது சினிமா பார்வையாளர்கள் பொதுவாக ஒரு படத்தில் விறுவிறுப்பான திரைக்கதையை விரும்புகின்றனர். அதனை தங்கலான் பூர்த்தி செய்யும் பட்சத்தில் வரவேற்பைப் பெறும்.
டிமாண்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிமாண்டி காலனி 2’. டிமாண்டி காலனி முதல் பாகத்தில் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டிமாண்டி காலனி வெளியானது முதல் சென்னையில் உள்ள உண்மையான டிமாண்டி காலனிக்கு பொதுமக்கள் அதிகமாக சென்று புகைப்படம் எடுத்தனர். அந்தளவிற்கு டிமாண்டி காலனி வரவேற்பை பெற்றது.