சென்னை:தென்னிந்திய சினிமா மற்றும் தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நயன்தாரா. இவரும், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும், கடந்த 2022ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், தற்போது நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில், தனது கணவரான விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான நயன்தாரா, அவரது குழந்தைகளின் புகைப்படங்கள், அவர் நடிக்கும் படம் குறித்த அப்டேட்களை பதிவிட்டு வருகிறார். நயனின் திரைப் பயணங்களைத் தாண்டி, தற்போது விக்னேஷ் சிவன், அவர்களது குழந்தைகள் என அவரது குடும்பம் குறித்த தகவல்கள் அதிக கவனத்தை பெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர், வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவனும், நயன்தாரவும் காதலிக்க தொடங்கி பத்து வருடங்கள் ஆனதாக சமீபத்தில் முடிந்த காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளத்தில் “10 years of 9” என பதிவிட்டது வைரலானது. நிஜ வாழ்க்கையைத் தாண்டி, சமூக வலைத்தளத்தில் இருவரும் காதலை பரிமாறிக் கொண்டு வரும் நிலையில், நயன் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்ததாக பரவும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் தெரிய வந்துள்ளது.