ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளும் பெரிய பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தமன். தமிழை விட தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா, ராம் சரண் உட்பட இன்னும் பல கதாநாயகர்களின் படங்களுக்கு தமன் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலையா என்றழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா, தமனுக்கு விலையுர்ந்த போர்ஷே (Porsche) எனும் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கரந்திக்கு வெளியான ’டாகு மஹாராஜ்’ திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் ’அகண்டா’, ’வீர சிம்ஹா ரெட்டி’, ’பகவந்த் கேசரி’ என தொடர்ச்சியாக பாலகிருஷ்ணாவின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தமன். இந்த கூட்டணியை ரசிகர்களும் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ’அகண்டா’திரைப்படத்தின் பிஜிஎம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இரண்டாம் பாகமாக உருவாகும் ’அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ’டாகு மஹராஜ்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தமனை பாராட்டி இந்த பரிசை வழங்கியுள்ளதாக பாலகிருஷ்ணா தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.