சென்னை: குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் கந்தசாமி இயக்கியுள்ள இப்படத்தை தன் கலாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புஜ்ஜி திரைப்படத்தின் திரை வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாவில், படத்தின் இயக்குநர் ராம் கந்தசாமி பேசுகையில், "ஒரு படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். சிக்கனமாக பட்ஜெட்டில் படம் எடுப்பது என்றால் கூட 50 லட்சம் ஆகும் என்று பேசிக் கொண்டிருந்தோம். ஒருநாள் சினிமா எடுப்பதைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, என் மனைவி ஒரு விஷயத்தைக் கூறினார்.
வீட்டில் ஆடு ஒன்று செல்லமாக வளர்ப்பதை பற்றிக் கூறினார். அப்படி வளர்த்த ஆட்டை விற்று விட்டார்கள். அதைத் தேடி நான் சென்ற போது என்னைத் தேடி என் பெற்றோர் வந்தார்கள் என்று சொன்னார். இது நல்ல கதையாக இருக்கிறதே என்று அதை விரிவுபடுத்தி ஒரு திரைக்கதையாக மாற்றினேன்.
முதலில் இதில் நடிப்பதாக இருந்த பெண் குழந்தை நடிக்க முடியவில்லை. எனவே, ஒரு வாரம் முன்பு வரை கூட யார் நடிப்பது என்று தெரியாத நிலை இருந்தது. அப்போது தான் பிரணிதி சிவசங்கரன் நடிக்க வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் அருண்மொழிச்சோழன் மிக வேகமாக பணியாற்றுபவர்.